கன்னியாகுமரி மாவட்டம்

     மனிதன் முதன்முதலில் தோன்றியதாகக் கருதப்படும் புனித பூமி – கன்னியாக்குமரி மாவட்டம்.

     அகஸ்தீஸ்வரம் – தோவாளை – கல்குளம் – விளவங்கோடு ஆகிய வட்டங்கள் அடங்கிய குமரி மாவட்டத்தில் முதல் இரு வட்டங்களைக் கொண்ட நிலப்பரப்புக்கு நாஞ்சில் நாடு என்றும், அதன்பின் நான்கு வட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்புக்கு தென்திருவாங்கூர் என்றும் பெயர் பெற்றிருந்தன. இம்மாவட்டத்தை முதல் முதலில் ஆட்சி செய்தவர்கள் ஆய் மன்னர்கள். ஆய் அண்டிரன் – திதியன் – அதியன் – நாஞ்சில் வள்ளுவன் – கோக்கருந்தடக்கன் – வரகுணன் போன்ற ஆய்மன்னர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் ஆட்சிகாலத்தில், தூய தமிழே ஆட்சியில் இருந்தது.

     தலையாலங்கானத்து போருக்குப்பின் ஆய் மன்னர்களின் சிறப்பு குன்றி – வலுவிழந்தது. கன்னியாக்குமரியின் சேந்தன் புதூர் – தாழக்குடி – அழகியபாண்டிபுரம் – பூதப்பாண்டி – கோட்டாறு முதலிய இடங்களில் பாண்டிய மன்னர்களான செழியன் சேந்தன் – அரிகேசரி மாறவர்மன் – கோச்சடையன் ரணதீரன் – மாறன் சடையன் – வீர நாராயண சடையன் – இரண்டாம் ராஜசிம்மன் – வரகுண பாண்டியன் முதலானோர் ஆண்டனர்.

     பராந்தக சோழன் பாண்டிய மன்னனான ராஜசிம்மனை வென்று கன்னியாக்குமரி, சுசீந்திரம் முதலிய இடங்களைக் கைப்பற்றி தன் ஆட்சியை நிலைபெறச் செய்தான். சோழ வம்ச ராஜராஜசோழன் காலத்தில் கன்னியாக்குமரி மாவட்டம் முழுவதும் சோழ அரசில் இருந்தது.

     பாண்டிய, சோழ மன்னர்களைப் போல் விஜயநகர மன்னர்களும் குமரி மாவட்டத்தைத் தாக்கினர். கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் போன்றோர் முக்கியமானவர்கள்.

     விஜயநகர மன்னர்களின் ஆட்சி நாயக்கர் மன்னர்களால் வீழ்த்தப்பட்டது. திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் போன்றோரின் படையெடுப்பால் நாஞ்சில் நாடு நலிவுற்றது. நாயக்க மன்னர்களின் படையெடுப்புக்குப்பின் சந்தாசாகிப் இங்கு படையெடுத்து கொட்டாரம், சுசீந்திரம், வடசேரி, திருப்பதிசாரம், வீமனசேரி முதலிய இடங்களைச் சூறையாடினான். ஆலயங்களையும் அவன் விட்டுவைக்கவில்லை. மார்த்தாண்டவர்ம மகாராஜா கர்நாடக நாவாப்போடு உடன்படிக்கைச் செய்ததால் போர் ஓய்ந்தது.

     திருவிதாம்கூர் மன்னர் பாலராமவர்மா ஆட்சியில் மந்திரியாக தளவாய் வேலுத்தம்பி இருந்தார். திருவிதாங்கூர் ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனி பாதுகாப்பிலும், மேற்பார்வையிலும் இருந்தது. இதற்காக ஒரு சிறு ஆங்கிலப்படை ரெசிடென்ட் கர்னல் மெக்காலே பொறுப்பில் இருந்தது. அதற்காக ஒரு பெரிய தொகையை கப்பமாக திருவாங்கூர் மன்னர் ஆங்கில ரெசிடென்டிடம் கொடுக்க வேண்டும். கப்பத் தொகையை கொடுப்பதில் பாக்கி விழுந்தது. இதன் காரணமாக ஆங்கிலப்படைகளும், திருவாங்கூர் மன்னரின் படைகளும் மோதின. திருவாங்கூர் படைத்தலைவன் வலிய எஜமான் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். வேலுத்தம்பி தற்கொலை செய்து கொண்டார்.

     திருவாங்கூர் கொச்சி மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் – தோவாளை – கல்குளம் – விளவங்கோடு ஆகிய வட்டங்கள் மொழிவழி மாநில அமைப்புகளை ஏற்படுத்துவதற்கென – நியமிக்கப்பட்ட மாநிலங்கள் திருத்தியமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தாய்த் தமிழகத்தோடு இணைய வேண்டுமென்ற போராட்டத்தின் முடிவில் 1956 நவம்பர் முதல் நாளிலிருந்து இம்மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு, நாட்டின் ஆட்சி முறைப்படி செயல்பட்டு வருகிறது.

     இத்தகவலானது இரணியல் கலைத்தோழனின் கன்னியாக்குமரி மாவட்ட நாடக வரலாறு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

     தேடல்கள் தொடரும்…..