சிந்தனைத் துளிகள்……

     முட்டையிலிருந்து பிறந்த வாத்துக்குஞ்சுகள் நீரில் நீந்திச்செல்ல பயிற்சி பள்ளியில் போய் கற்க வேண்டியதில்லை. தானே நீந்திச் செல்லும். ஆனால், மனிதர்கள் எண்ணையும், எழுத்தையும் கற்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறார்கள்.

      தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது. சிலப்பதிகாரத்தில் நடன அரங்குத்தூணின் நிழல் அரங்கில் விழாது. இவை எதனைக் காட்டுகிறது? ‘சில பெரிய மனிதர்களின் மனசாட்சியின் குரல் வெளியே ஒலிக்காது என்பதையே.’

      பல மணி நேரம் காலதாமதமாக வரும் ரயில்களுக்கு எல்லாம் ரயில்வே நிலையத்து கடிகாரமே பொறுப்பு என்பதா? மனம் அறிந்தே செய்யும் தவறுகளுக்கு எல்லாம் கடவுளை பொறுப்பாக்குவதா?

      காலத்தை வெல்லும் ஆற்றலை எவரும் பெறவில்லை. ஆனால் கவிஞன் கவிதையால் காலத்தை வெல்கிறான்.

      தென்னை மரத்தின் வழியாகச் செல்லும் சாக்கடை நீரே சுவையுள்ள இளநீராகிறது. நல்ல நூல் வழிநடக்கும் மனித மனம் சான்றோன் ஆகிறது.

      மாட்டுப்பொங்கலுக்கு மாட்டின் கொம்பிலே கட்சிகளின் கொடியின் வர்ணத்தை பூசுவார்கள். ஆனால் எந்த மாடும் அந்தக் கட்சியின் கொள்ளைகளில் ஒற்று வாழ்வதில்லை.

      பாழ்மண்டபத்தில் தலைகீழாக தொங்குகின்ற வௌவால்களுக்கு இந்த உலகம் தலைகீழாகவே தெரியும். இந்த உலகம் நேராகவே இருக்கிறது என்று அவைகளிடம் போய் விளக்கும் பணியே சீர்திருத்த பணி.

      மனதில் புரியாத ஒரு பாடத்தை கற்பது பாலை வழியில் சுடுமணலில் காலில் செருப்பு இல்லாமல் நடப்பது. மனதில் நன்கு புரிந்த ஒரு பாடத்தைக் கற்பது பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை நிழலில் மலர் மெத்தையில் நடப்பதுவே.

 -புலவர் இராமசாமி.

நன்றி: தமிழ் மக்கள் முரசு