இரணியல் கலைத்தோழன்
திரு. சா. ஆசீர்வாதம், திருமதி. சி. சாராள் என்னுடைய பெற்றோர். மாங்குழியில் பல்லாண்டுகளாள நடைபெற்று வரும் ‘மூன்று ராஜாக்கள்’ கிறிஸ்தவ நாடகத்தைத் தொடர்ந்து பார்த்தபின், நாடகக்கலையின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. மாங்குழி சின்ன சௌந்திரயம் நாடார், பெரிய சவுந்தரியம் நாடார் ஆகியோரின் நடிப்பைப் பார்த்தபின், நடிக்கும் ஆவல் உண்டானது.
கேப்டன் ஆரோன் ராஜ் அவர்கள் டைரக்ட் செய்து, நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பூத்டக்கர் ஹாலில் நடந்த சமூக நாடகத்தில் இரண்டே காட்சிகளில் நடித்தேன். அதன்பின் நாடகம் எழுதும் எண்ணம் உருவானது. கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த நான் – புனித வேதாகமத்திலுள்ள கெட்ட குமாரன் கதையை திருந்திய மைந்தன் நாடகமாக எழுதினேன். அதில் நானே டைரக்ட் செய்து, பெருங்கோடு இரட்சணிய சேனை ஆலயத்தில் 1-1-1947 -ல் அரங்கேற்றினேன். என் தந்தை இசை ஞானமுடையவர். என்னை சங்கீதம் படிக்க வைத்தார். வறுமையின் காரணமாக சங்கீதம் சுதி கலைந்து விட்டது. அப்புறம் ஓவியம் கற்றேன். அதுவும் இடையில் கலைந்து போயிற்று. கடந்த 52 ஆண்டுகளாக சுமார் 72 நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவை தமிழகம் மட்டுமல்லாது, கேரளம், ஆந்திரா, மகாராஷ்டிரம் (பம்பாய் – ஜெரிமேரி) முதலிய மாநிலங்களில் – சுமார் இரண்டாயிரம் மேடைகளில் நடிக்கப்பட்டுள்ளன.
குறும்பனை புனித இஞ்ஞாசியார் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி – ஓய்வு பெற்ற நான் 80-க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். அவை அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன. சுமார் இருபத்தாறு நூற்களை வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய படைப்புகளில் ஆறு நூற்கள் அரசு நூலகங்களில் இடம் பெற்றுள்ளன. திருச்சி – திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், ரேடியோ வெரித்தாஸ், பீபா ரேடியோ போன்ற வானொலிகளில் என்னுடைய நாடகங்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும் ஒலிபரப்பப் பட்டுள்ளன.
டெல்லி பாரதீய தலித் சாகித்திய அகாடமியின் டாக்டர். அம்பேத்கார் ஃபெல்லோஷிப் அவார்டு (1997), மதுரை சதங்கை அகாடமியின் ‘அரங்கேற்ற கலைமணி’ விருது (1992), குமரி மாவட்ட நாஞ்சில் நாதம் மக்கள் கலைத் தொடர்பகம் வழங்கும் நாஞ்சில் நாதம் விருது (1998), குமரி மாவட்ட நாடக்கலைஞர்களால் நாடகக்கலாசகாரம், நாடகக் கலைமணி, நாஞ்சில் நாடகக் கலைச்சுடர், நாடக வேந்தன் முதலிய பட்டங்களும் பெற்றிருக்கிறேன். பணமும் பாசமும் என்னும் வீடியோ நாடகத்தையும், அதிசய பாலன் இன்னிசை ஒலி நாடா இவற்றை தயாரித்திருக்கிறேன்.
ரோஜா (மாத இதழ்) வெளியீட்டாளராகவும் – நாடகக்கலை, நாடகத்திரை (மாத இதழ்கள்) இவைகளின் ஆசிரியராகவும் – அருட்தந்தை ஹிலறி A. M. அடிகளின் ‘உதய தாரகை’ (வார இதழ்) – கொடுங்குளம் ராஜேந்திரனின் ‘சிறுமலர்’ (மாத இதழ்) – இன்னும் பல இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கிறேன். தினமணி கதிர் – தினமலர் – அமுத சுரபி – தென்ஒலி – ராணி – WHO IS WHO (டெல்லியிலிருந்து வெளிவருவது) – குமரி போன்ற இருபதுக்கும் மேற்பட்ட இதழ்களில் என்னுடைய வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. என் பணி தொடருகிறது…..