M.A Devadasan

உயரின உறவுகளே!
உங்களுடன் –

     கன்னியாக்குமரி மாவட்டத்தின் நடுப்பகுதியாக அமைந்துள்ள திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழம்பெரும் கிராமமான மாங்குழி ஊரில் பிறந்தேன். தந்தை எஸ். ஆசீர்வாதம், தாயார் கே. சாராள். எளிய குடும்ப வாழ்க்கையில் பிள்ளைகளாக நிறைந்தவர் நால்வர். முத்தவர் எம். ஏ. சாமுவேல் (இரணியல் கலைத்தோழன்). பள்ளி ஆசிரியர் – நாடக ஆசிரியர் – பன்முக எழுத்தாளர் – பல விருது பெற்றவர் – பல நூல்களை எழுதி வெளியிட்டவர் – நாடக இயக்குனருமே.

     இளையவனாகிய நான் (எம். ஏ. தேவதாசன்) பல – பல சிரமங்களுக்கு இடையே – இடைவெளி விட்டு விட்டு 26 வயதிலே இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்து – அரசு ஆசிரியராகப் பணியில் தொடர்ந்து, ஓய்வுபெற்று 21 ஆண்டுகளைக் கடந்துள்ளேன். முதுமை, முடியாமை, தனிமை – முப்பெரும் பயனோடு முடிவையே எதிர்நோக்கிய நிலையில் உங்களுடன்.

     சிறுவயது – பள்ளிப் பருவத்திலே உழைப்பையே முதலீடாக்கி உயரவே முற்பட்டேன். ஏழ்மையும், வறுமையும் சிந்திக்க தூண்டிய நிலையில் – பார்த்ததை படித்ததையே – உள்ளத்து உணர்வுகளை எழுதுவேன். எழுதி எழுதி கிழித்ததே அனுபவமானது. கவிதை எழுதுவதும், சினிமா மெட்டுகளில் பாடல்கள் எழுதிப் பாடுவதும் விருப்பமாகியது. 9-வது வகுப்பு படிக்கும் போது – செட்டியார்மடம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் ஓய்வு பிரிவு உபசார விழாவுக்கு ‘பாராட்டு இதழ்’ கவிதையாக எழுதி பதிப்பித்தளித்தது – மகிழ்வான நிகழ்ச்சியே!

     எழுதியவை ஏராளம். கவிதைகள் – பாடல்கள் – கட்டுரைகள் – வாழ்த்து மடல்கள்.

     பதிவிடும் வாய்ப்பு வசதி ஏற்படவில்லை. என்றாலும், எழுதுவேன். துன்ப துயரத்திலும் எழுதுவேன். கால நேரம் பார்ப்பதில்லை. ‘ஏழ்மை வாழ்வைக் கொல்லும், எளிமை வாழ்வை வெல்லும்.’ முயற்சி, சிந்தனைகளை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

     என் இனிய நண்பரான புலவர் கு. செல்லம் மற்றும் புலவர் கு. பச்சைமால் (தமிழாலய நிறுவனர்) ஆகியோரின் உதவியால் 1971 -ல் ‘நன்மொழிகள்’ என்ற நூலினையும், 1972 –ல் ‘கருத்துப் பொட்டலம்’ என்ற நூலையும் வெளியிட்டேன். தொடர்ந்து வெளியிட பலவித தடங்கல்கள். இந்நிலையிலும் 20 ஆண்டுகளாக ஆசிரியப்பணி பொறுப்பிலும் செயல்பட்டேன்.

     என் இல்லற வாழ்க்கை – கலப்புத்திருமணமும், எதிர் நீச்சலுமானது. வெறுப்பு – பகை – உறவுகள் எதிர்ப்பு இன்னல்களிலே மகிழ்ந்தது. வாழ்க்கை போராட்டமானது.

      என்றாலும் வெற்றியை நோக்கியே நகர்ந்தேன். கைத்தொழில் கைகொடுத்து உதவியது. தடவல் வைத்தியம் பலனாகவே அமைந்தது. வாத்தியார் – வைத்தியர், ஆசான் என்ற பெயராலும் அழைக்கப்பட்டேன். நீண்டநாள் மருத்துவத்தோடு 1996 -ல் மனைவி காலமானர். பிள்ளைகள் மகள், மகன் இருவர். முதுகலை மருத்துவ பட்டதாரிகள்.

     நான் மட்டும் பெற்றோராக இருந்து அவர்களை படிக்க வைத்து, இருவருக்கும் தகுதியான துணைகளை இணைத்து வைத்தேன். அவர்களும் பிள்ளைகளுடன் நலமாக, மகிழ்வாக உள்ளனர்.

     நானோ, என்னைப் பராமரித்து பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் – உள்ள உணர்வுகளை எழுதும் உறவோனாக உங்களுடன்……

     என் கருத்துகள் தினமலர், தினமணி, செய்தி மலர், ஒளிவெள்ளம், தென் ஒலி, முதற்சங்கு மார்த்தாண்டம் மாலை, தமிழ்வாசம் போன்ற பதிவுகளில் வந்துள்ளது. என் உள்ளக் கருத்துக்களையும், உணர்வுகளையும், வாழ்க்கை நடைமுறையில் கண்ட – கேட்ட – உணர்ந்த – ஆய்ந்த – தெளிவுகளையும் நமது சந்ததிகளுக்கு தெரியப்படுத்துவதும் எனது கடமையென விரும்பினேன்.

நடப்பவை – நலமாக, மகிழ்வாக அமையட்டும்.

உறவோன்,
எம். ஏ. தேவதாசன்.

Author’s Books

Get in Touch