Founder Profile

‘எண்ணித் துணிக….’

     என் பெற்றோர் திரு. T. லாசர், திருமதி. M. ஆன்றனி புஷ்பம். எனக்கு ஒரு இளைய சகோதரன் என மொத்தம் நான்கு பேர் கொண்ட அளவான குடும்பம் எனது குடும்பம்.

     எனது முதல் கவிதையை இளங்கலை வணிகவியல் படிக்கும் காலத்தில் எழுதத் தொடங்கியதாய் நியாபகம். கிட்டத்தட்ட ஆறு வயதில் இருந்தே அருகே இருந்த நூலகத்திற்குச் சென்று மகாபாரத – இராமாயணக் கதைகளையும், விக்கிரமாதித்தன் – வேதாளக் கதைகளையும், நீதிநெறிக் கதைகளையும் வாசிக்கத் தொடங்கியதன் பலனாக வாசிக்கும் பழக்கத்தில் தனியொரு ஆர்வம் இருந்தது. கர்ணனும், விக்கிரமாதித்தனும், இந்திரஜித்தும் என்னை கவர்ந்த கதாப்பாத்திரங்களாய் அன்றுமுதல் இன்றுவரை நீடித்துவருகின்றனர்.

     கல்லூரி நாட்களிலோ, வேலை தேடும் தொடக்கக் காலத்திலோ எழுத்தாளன் ஆக வேண்டுமென்றோ…..! நாவல்கள் எழுதுவேன் என்றோ சிறிதுகூட யோசித்தது கிடையாது.

     ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபின், திரும்பவும் வேலை தேடும் படலம் தொடங்கிய காலகட்டத்தில் அந்த சம்பவமும் நடந்தது.

     திரு. கல்கி அவர்களின் ‘சோலை மலை இளவரசி’ நாவலை படித்துக்கொண்டிருந்தேன். வாழ்வில் புது பாதையாகவும், என் தேடலின் தொடக்கமாகவும் அது மாறியது. சிறு – சிறு கவிதைகளை விளையாட்டிற்காய் எழுதிக் கொண்டிருந்ததின் அடுத்த பரிணாமமாய் ‘நாவல் எழுதிப் பார்ப்போமா?’ என நினைக்கத் தோன்றியது. சிறுவயதிலிருந்தே தொடர்ந்துவந்த வாசிப்பு அனுபவம் என்னை சரளமாக எழுத வைத்தது.

     ஒரு குறுநாவலாக (கிட்டத்தட்ட 35 பக்கங்கள்) என் முதல் படைப்பை எழுதிமுடிக்க, எழுத்தின் மீதும் – தமிழின் மீதும் தனியொரு பற்று வர ஆரம்பித்தது. மேலும் சில நாவல்களுக்கான கதைக்கருவை அடுத்த சில மாதங்களில் எழுதி முடிக்கவே, ஆர்வமும் அதிகரித்தது.

     அதன்பின் எனது தேடல் ‘எழுத்துலகமே…..’ என்ற கோட்டின் தொடக்கப் புள்ளியில் அமர்ந்துவிட்டது. சில வருடங்கள் வாய்ப்பு தேடி அலைந்தபின் சுயமாக ஒரு பதிப்பகம் தொடங்க முடிவு செய்தோம்.

     எனது படைப்புகளை வெளிவிடும் நேரத்தில் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடும் வாய்ப்பும் கிடைத்தது. சான்றோர்கள் பலரின் ஆதரவோடு பல படைப்புகளையும், பல படைப்பாளிகளையும் மக்கள் முன் நிலைநிறுத்த சக ஆதரவாளர்களோடு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

இவண்,

விபின் அலெக்ஸ்