M. Maria Louis

வாசகர்களுடன் ஒரு நிமிடம்,

     முதலில் நான் உண்மையைச் சொல்லிக் கொள்கிறேன். நான் எழுத்தாளன் இல்லை. சினிமாவின் மீது கொண்ட காதலால் எழுத்தாளன் ஆனவன்.

     சடையால்புதூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், சிறுவனாக இருந்தபோது பெற்றோருடன் வீர பாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்தேன். அடுத்த சில வருடம் கழித்து பணத்தோட்டம் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இருந்தே திரைப்படத்தின் மீது ஆர்வம் ஏற்ப்பட்டு விட்டது. இதன் காரணமாக தினமும் வீட்டில் இருந்து அரை மைல் தூரத்தில் இருக்கும் கடையில் தினத்தந்தி படிப்பேன். ஏனென்றால் அதில் தான் சினிமா விளம்பரங்கள் வெளியாகும். அவற்றில் ஒன்று விடாமல் பார்க்கப் பார்க்க சினிமா மோகம் என்னுள் வளர்ந்து கொண்டது. ஆனாலும் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு உடனடியாக அமையவில்லை. காரணம் குடும்ப சூழ்நிலை.

     கல்லூரியில் சேர்ந்த பின்பு என் விருப்பத்திற்கேற்ப சினிமா படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு படம் விடாமல் பார்ப்பேன். இந்த நேரத்தில் சில படங்களை இப்படி எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அதன் விளைவு நானே கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்படியே திரை உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசை இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது.

     வீட்டில் வேலை தேடப் போவதாக சொல்லி சென்னைக்கு பயணம் ஆனேன். அங்கே பல திரைப்பட இயக்குனர்களை சந்தித்தேன். நான் நினைத்தபடி எதுவுமே நடக்கவில்லை. ஒரு தயாளிப்பாளர், ‘உங்கள் கதை, பத்திரிக்கையில் வந்தால் கொண்டு வாருங்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். திரு. பயஸ் மூலமாக ‘சிம்லாவில் காதல்’, ‘கண்மணி ஹீனா’ என்ற இரு கதைகளும் ‘கல்லூரி கனி’ என்ற பத்திரிக்கை மூலமாக புத்தக வடிவம் பெற்றது. மீண்டும் சென்னை பயணம். ஆனால் நான் நினைத்தது எதுவும் கைகூடவில்லை.

     இந்த நேரத்தில் நடிகர் திலகத்தை வைத்து பல மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சிம்லாவில் காதல்’ என்ற கதையை மிகவும் சிரமப்பட்டு அவரை படிக்க வைத்தேன். அவருக்கு அந்த கதை பிடித்திருந்தும் தொலை தொடர்பு சாதனங்கள் இன்று போல் இல்லாமல் இருந்தாலும், என்னுடைய பிறப்பிடம் சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருந்ததாலும் என்னால் அந்த மாபெரும் வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று வருந்தினேன். திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைப்பது கடலில் மூழ்கி முத்து எடுப்பது போன்று கடினமானது என்று உணர்ந்த நான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டேன்.

     திரைப்படத்துறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வணிகத்தில் இறங்கினேன். திருமணம் நடந்தது. புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றிய, ‘ஜோதி’ என்பவரை என் உடமைச் சொத்தாக மணமுடித்து, இரண்டு குழந்தைச் செல்வங்களின் தந்தையாகி, மகளையும் மணமுடித்துக் கொடுத்து, இன்று மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறேன்.

     இப்படி வாழ்க்கை சுவையாக போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இளம் எழுத்தாளராக வளர்ந்து வரும் திரு. L.விபின் அலெக்ஸ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வாயிலாக என் ‘சிம்லாவின் காதல்’, ‘கண்மணி ஹீனா’ என்ற இரு படைப்புகளும் உங்களை நோக்கி…..

     என் படைப்புகள் குறித்த உங்களின் மேலான கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

இவண்,

M. மரிய லூயிஸ்

 

 

Author’s Books

Get in Touch