PONNEELAN

பொன்னீலன் வாழ்க்கைக் குறிப்பு

     பொன்னீலன் 1940 டிசம்பர் 15 அன்று குமரி மாவட்டத்திலுள்ள மணிகட்டிப்பொட்டல் என்னும் சிறிய ஊரில் பிறந்தார். அவர் தந்தையார் சிவ. பொன்னீல வடிவு. பள்ளியில் படிக்கின்றக் காலத்தில் இருந்து வாழ்வின் இறுதி வரை பிரம்ம சமாஜியாக வாழ்ந்தவர். இதனால் கல்லூரியில் பேராசிரியர்களோடு அடிக்கடிச் சண்டை ஏற்பட்டுப் படிப்பை நிறுத்திப் பள்ளி ஆசிரியரானவர்.

     பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாள். உள்ளுர்ப் பள்ளியில் ஏழாவது வரைப் படித்தவர். சுய ஆர்வத்தால் மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றை வாசிக்கவும் பேசவும் கற்றவர். கவலை என்னும் புகழ்பெற்ற நூலைத் தன் அறுபதாவது வயதில் எழுதியவர்.

     பொன்னீலன் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் 1960ல் பட்டப் படிப்பு  (இயற்பியல்) முடித்தார். ஆசிரியர் பயிற்சிப் பெற்று, 1962ல் ஆசிரியரானார். 1998ல் கோவை முதன்மைக் கல்வி அலுவலராக ஓய்வு பெற்றார்.

     கல்விப் பணியில் அக்கறைக் கொண்டவராக இருந்தாலும் தன் ஓய்வு நேரத்தை இலக்கிய வாசிப்பதிலும், இலக்கியப் படைப்பிலும் செலவிட்டார் பொன்னீலன். அவருடைய பெரிய நாவல்கள் மூன்று. அவற்றில் ‘கரிசல்‘ 1976ல் வெளியாயிற்று. 1983ல் அது தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றது. 1950-60களில் திருநெல்வேலி கரிசல் வட்டாரத்தில் நடந்த நிலப் போராட்டங்களை மையமாகக் கொண்ட நாவல் அது. பல பல்கலைக்கழகங்களில் அது பாடமாக வைக்கப்பட்டது. ஹிந்தியிலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

     பொன்னீலனின் இரண்டாவது பெரிய நாவல் ‘புதிய தரிசனங்கள்‘. 1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் 1975 காலத்தில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்த அவசர நிலை காலச் சிக்கல்களை மையமாகக் கொண்டது. 1994ல் அது சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதமியால் 2016ல் வெளியிடப்பட்டது.

     பொன்னீலனின் மூன்றாவது பெரிய நாவல் ‘மறுபக்கம்’. இது 2010ல் வெளிவந்தது. 1981ல் குமரி மாவட்டத்தை உலுக்கி, இந்தியா எங்கும் எதிரொலித்த மண்டைக்காடு கலவரத்தை மையமாகக் கொண்டது இந்த நாவல். இலக்கியச் சிந்தனை விருது 2011, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விருது 2011, தினத்தந்தி ஆதித்தனார் விருது 2011, இன்னும் பல விருதுகளை அது பெற்றது.

     பொன்னீலன் பல வாழ்க்கை வரலாறுகளைப் படைத்திருக்கிறார். ஜீவா என்றொரு மானுடன் (தமிழக அரசு பரிசு – 1983), தவத்திரு குன்றக்குடி அடிகளார், தொ.மு.சி ரகுநாதன் ஆகியவை அவற்றில் முதன்மையானவை.

     உலக சமாதான இயக்கத்திலும் ஆர்வம் கொண்டவர் பொன்னீலன். 1985ல் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை அணு ஆயுதத்துக்கு எதிரான இருபத்தி ரெண்டு நாள் நடைபயணத்தைத் தலைமைத் தாங்கிச் சென்றவர் அவர். அதே ஆண்டு கோபன் ஹேகனில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கு பெற்றார்.

     இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கை அரசு இவற்றால் அழைக்கப்பட்டு 1996ல் இலங்கையில் பல இடங்களில் பதினான்கு நாட்கள் உரையாற்றினார் பொன்னீலன்.

     அவருடைய படைப்புகளை ஆய்வு செய்து பத்து கல்லூரி ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

இவர் இன்னும் பல படைத்திருக்கிறார். அவற்றில் முக்கியமானவை: 

  1. சிறுகதைத் தொகுப்புகள் – 4
  2. சமூக கட்டுரை நூல்கள் – 4
  3. மொழிபெயர்ப்புகள் – 3
  4. கவிதை நூல்கள் – 2
  5. நாட்டுப்புற இலக்கியங்கள் – 2

     நாட்டுப்புற கதைகள், நாட்டுப்புற பாடல்கள், தென் குமரி வட்டார வழக்குகள் இவற்றைத் தொகுத்தும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

     இலக்கிய இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார் பொன்னீலன். 1988-2010 காலங்களில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இப்போது எட்டு ஆண்டுகளாக அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

     பாரதிதாசன் கவிதை உலகம், ரகுநாதன் இலக்கியத் தடம், பாரதி என்றென்றும் முதலிய பல தலைப்புகளில் பல கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

பொன்னீலன் படைப்புகள் பற்றிக் கீழ்கண்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

  1. புதிய தரிசனங்கள் – கலையும், அரசியலும், தொகுப்பாளர் கோவை ஞானி.
  2. மானுடப் பறவை – பொன்னீலனின் அறுபதாவது ஆண்டு வெளியீடு
  3. பொன்னீலனின் படைப்பிலக்கியங்கள் – டாக்டர் எஸ்.ஆர்.கீதா
  4. நீல மயம் – மாலாப் பிரியதர்சினி
  5. பொன்னீலன் – வேல் குற்றாலம்

      தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இவருக்கு ‘எழுத்து வேந்தர்’ என்னும் சிறப்பு பட்டத்தையும், பொற்பதக்கத்தையும் அளித்தார்.

 

Author’s Books

Get in Touch