அத்தாணிக் கதைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் தஞ்சை மாவட்டத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் சின்னஞ் சிறிய கிராமமே அத்தாணி. பஸ், குழாய்த் தண்ணீர், மின்சாரம், சினிமாக் கொட்டகை, தொலைக்காட்சிப் பெட்டி என்னும் பஞ்ச பூதங்களைத் தவிர, மற்றபடி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அருமையான தமிழ்க் கிராமம். விவசாயத்தையே எல்லாமாகக் கொண்ட அற்புதமான மக்கள். சுரையும், பூசணியும் போல நாட்டுப்புறக் கதைகளும், பழமொழிகளும், பாடல்களும் மக்கள் வாழ்வோடு படர்ந்து எங்கும் பூத்துக் கிடக்கும்.

அத்தாணியில் நான் பணியாற்றிய காலத்தில் (1983-88) விவசாயப் பெருமக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு நிரம்பக் கிடைத்தது. நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிக்கும் வழக்கம் இளமையிலேயே என்னிடம் இருந்தது. அவ்வப்போது செவியில் விழும் கதைகளை நாட்குறிப்புகளிலோ, காகிதங்களிலோ எழுதி இந்த நாட்டுப்புறச் செல்வங்களைச் சேகரிக்கும் வழக்கம் அத்தாணியில் தொடர்ந்தது.

அவற்றைத் தொகுத்தபோது பல கதைகள் சுவையானவையாயிருந்தன. அவற்றோடு நான் முன்னும் பின்னுமாகத் தொகுத்த வேறு பல இடத்துக் கதைகளும், குறிப்பாக என் பொட்டல் வட்டாரத்துக் கதைகளும் இருந்தன. மொத்தம் 51 கதைகள்.

அத்தாணி ஊரோடும், மக்களோடும் எனக்கிருந்த ஆழமான நேசமே இப்பெயருக்கான காரணம். மற்றபடி வேறு வட்டாரக் கதைகள் பலவும் இவற்றோடு உள்ளன.

Category: Tag:

Description

E-Book Link