இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள்

     இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி. தமிழன் தன்னுடைய வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாகப் பிரித்தான். தன்னுடைய வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டவன் தமிழன். வீரத்திலும் சரி, செயலிலும் சரி துடிப்போடு செயல்பட்டவன் இலக்கியங்கள் கண்ட தமிழன். மனிதன் வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்வியல் கோட்பாடுகளை வகுத்தான். விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதன் குகையில் வாழ ஆரம்பித்தான். அடுத்து மரப்பொந்தில் வாழ ஆரம்பித்தான்.

     நாகரிகம் முன்னேற முன்னேற தனக்கென ஒரு வீடு கட்டி அதில் வாழ ஆரம்பித்தான். உலகத்தினுடைய முதல் மொழி தமிழ் மொழி. உலகத்தின் முதல் நாகரிகம் தமிழன் நாகரிகம். உலகத்தின் முதல் பண்பாடு தமிழன் பண்பாடு. பேச்சுக்களை முதலில் பேசியவன் தமிழன். தீயைக் கண்டுபிடித்தவன் தமிழன். தீந்தமிழை பேச ஆரம்பித்தவன் தமிழன்.

     சங்ககாலம் ஒரு பொற்காலம். அப்போது எழுந்த இலக்கியங்கள் பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் இவை வாழ்வியலை மட்டுமல்ல வாழ்வியல் வரன்முறைகளையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழைப் படிக்கும் தமிழனுடைய பேச்சும் அமுதமாக அமைந்தது. ஆயக்கலைகள் 64 என்பர். ஆனால், ஒவ்வொரு கலைக்கும் தமிழன் தனி இலக்கணமே படைத்திருக்கிறான்.

     இலக்கியங்கள் பல்வேறு நன்மைகளை உணர்த்துகின்றன. வரலாற்றுச் சம்பவங்கள் உண்மைச் சம்பவங்களாக இலக்கியத்தில் வெளிவருகின்றன. இலக்கியம் மனித வாழ்க்கையின் சாறுபிழிந்து எடுத்த தேன்சுவை கலந்த தித்திக்கும் பழச்சாறு எனலாம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் நடந்தவற்றை இலக்கியமாக படைத்திருக்கிறான். தமிழன் பேரை விரும்பவில்லை. கருத்துகளை வெளியிடுவதை விரும்பியிருக்கிறான். தமிழன் வீரத்தை விரும்பியிருக்கிறான். தமிழன் காதலை விரும்பியிருக்கிறான். தமிழன் வாழ்க்கையை விரும்பியிருக்கிறான். தமிழன் இலக்கியத்தை படைத்திருக்கிறான். இவைப் பற்றி இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள் என்ற என்னுடைய நூலில் பலக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

– பேரா. முனைவர் சா. குமரேசன்

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக