எங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது

உங்கள் காதுகளுக்கு மட்டுமே…..

     எழுத்தாளனின் உலைக்களத்திற்கு எல்லாம் இரும்பே என்று எழுத்தாளர்கள் சொல்லிக்கொண்டாலும், எழுதும் போதுதான் தெரிகிறது எல்லாம் ஒவ்வொரு எழுத்தாளனுள் எரியும் நெருப்பைப் பொருத்துத்தான் என்று.

     என்னதான் உலகம் சுற்றி அநுபவம் தேடினாலும் அது பயணக்கட்டுரைக்கு மேல் எழுத ஒன்றும் பேனாவிற்குள் மை ஊற்றப்போவதில்லை. ஆக தனக்குத் தெரிந்தவற்றை, தனது உற்றார் உறவினருக்கு நடந்தவற்றை, தனது நெருங்கிய நண்பர்கள் அழாத குறையாகச் சொல்லியவற்றை வைத்துத்தான் கதை பின்ன வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்தாளனின் மனதை தொட்டாலன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே என்று சொல்லாமல் சொல்லி அது வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கும்.

     எதுவுமே மனதில் பதிந்தால்தானே, ஆழ்மனதில் புதைந்தால்தானே அது மனதைக் கீறி வெளியே வரும். அப்படி ஆழ்மனதில் புதைந்து போன ஏதோ ஒன்று பல பத்தாண்டுகளுக்குப் பின் நான் வெளியே போயே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெளிக் கிளம்பும்போது எந்தக் கர்த்தாவாலும் அதற்குத் தடை விதித்து ஆயுள் தண்டனை கொடுத்து உட்கார வைத்துவிட முடியாது.

     இப்படி என் ஆழ்மனதிலிருந்து வெளியாவதுதான் என் படைப்புலகம். ஆக, என் இரு மொழி படைப்புகள் அனைத்துமே என் மனதில் இடம் பிடித்தவை பற்றியே.

     ஒரு முறை அகில இந்திய வானொலிக்காக என்னை நேர்காணல் கண்டவர் கேட்ட ஒரு கேள்வி: “நாற்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள் சுயசரிதை ஏன் இதுவரை எழுதவில்லை?”  எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம், என் படைப்புகள் எல்லாமே என்னைப் பற்றித்தானே! என்னோடு உறவாடியவர்கள் பற்றித்தானே….. உறவாடிக் கொண்டிருப்பவர்களைப் பற்றித் தானே. பெயர் மாற்றப்பட்டிருக்கலாம், ஆள் மாற்றப் படவில்லை.

     நான் தமிழில் எழுதிய முதல் நாவல் ‘சாட்டை’. இது என் அப்பாவின் கதை.  என் கதையும்தான். என் அப்பா இல்லாமல் நான் எங்கிருந்து வந்துவிட்டேன்! வாசகர் மத்தியிலே இந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு என்னை புளகாங்கிதம் அடையச் செய்தது.

     ‘எங்கள் தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது’ எனது இரண்டாவது நாவல். மற்ற பேரப்பிள்ளைகளைவிட என் மீது தனி கவனம் செலுத்திய என் தாத்தா, என் ஆயா பற்றியது. இந்த நாவலில் முக்கியக் கதாபாத்திரம் தோட்டம் தான். மரம் செடி கொடிகளோடு, பறக்கத் தெரியா பறவையினங்கள், தப்பிக்கத் தெரியா விலங்கினங்கள், இவைகளோடு தோட்டத்தில் வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொண்ட நான்….. இவைகளைத்தான், இவர்களைத்தான் நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள்.

     இப்போதெல்லாம் தோட்டங்கள் காணாமல் போய் ஒரு சிலரது வீட்டில் மட்டும் மாடித் தோட்டங்களாய் உருமாறிப்போய்… எல்லாம் நாகரிகம் என்ற பெயரிலே நடக்கும் அட்டூழியங்களின் வெளிப்பாடு. ஓடி ஆடி விளையாடிய மண் தெரு காணாமல் போய், தார் ரோடு ஆகிப்போய் ஓடவும் முடியாமல் ஆடவும் முடியாமல்…. எல்லாம் மனிதக்குட்டிகள் பெருக்கத்தோடு வாகனப் பெருக்கமும் சேர்ந்து கொண்டதனால் வந்த வினை.

     என் பேரப்பிள்ளைகள் விளையாட வேண்டுமென்றால் ஒரு நாலைந்து கிலோ மீட்டர் தூரம் போய் அரசு பூங்காவினுள்தான் செல்ல வேண்டும். அங்கேயும் ஒரு சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் விளையாட வேண்டும்.

      என்ன செய்ய?

      ஒன்றும் செய்ய முடியாது. மனதை வேண்டுமானால் தேற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் முடியும். இந்த மனதை தேற்றிக் கொள்ளும் முயற்சியில் பிறந்ததே இந்த எனது இரண்டாவது நாவல்.

     நான் ஆடி மகிழ்ந்த தோட்டம். எனக்கு வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்த தோட்டம். எனக்குக் கடவுளைக் காட்டிய தோட்டம். அந்தத் தோட்டம் அழியாமல் பாதுகாக்க நான் எடுத்த முயற்சியே இந்த நாவல்.

     தோட்டத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்….. நீங்கள் உள்ளே செல்லலாம்.

     – ராஜ்ஜா

Category: Tag:

Description

E-Book Link