கலைத்தோழன் சிறுகதைகள்

     திரு. கலைத்தோழன் அவர்களை சிறந்த நாடக ஆசிரியர் என்றுதான் அறிந்திருக்கின்றோம். ஆனால் சிறந்த சிறுகதைப் படைப்பாளரும் கூட என்ற ஒரு உண்மையை இதில் அடங்கியுள்ள சிறுகதைகள் மெய்ப்பிக்கின்றன.

     மனிதகுல முன்னேற்றத்திற்காக இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். இந்த இலக்கணத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் சிறந்த படைப்பாளர் பலர் பணியாற்றி வருகின்றனர். என்றாலும் லட்சக்கணக்கில் விற்பனையாகின்ற பத்திரிகையில் கதைகள் வெளிவந்தால்தான் பலர் அறியும் படைப்பாளர்களாக விளம்பரம் பெற முடிகின்றது. மேலும்,

     இலக்கியப் படைப்பாளர்களுக்கு விளம்பரம் கொடுத்து சில இடங்கில் ‘தூக்கி விடுவதிலும்’ சாதியும், மதமும் கைகொடுத்து வருகிறது. இந்த நிலை நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்றால் அது பொய்யல்ல!

     அதிகமாக விற்பனையாகும் பத்திரிகைகள் சில தமக்கு வருகிற கதைகளை, முகவரியை மட்டும் பார்த்துவிட்டுப் புறக்கணிக்காமல் கதைகளையும் படித்துப் பார்க்க வேண்டும். அதை தமது கடமையாகப் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழ் இலக்கியம் வளரும்.

     இன்று ஒரு சிலர் தங்களை அனுபவமுள்ளோர்களாகக் காட்டிக்கொள்ள, சிறுகதை எழுத்தாளர் பட்டியலைச் சொல்லும் பொழுது ஒரு பத்து எழுத்தாளர்களை மட்டும் – அதுவும் மறைந்த மறையக்கூடிய நிலையிலிருக்கிற மிகச் சிலரின் பெயர்களை மட்டும் சொல்லிவிட்டு தங்களையும் அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள். தற்காலப் படைப்பாளர்களில் சிறந்தவர்களின் பெயர்களைச் சொல்லுவதற்குக்கூட அவர்களுக்கு மனம் வருவதில்லை. பத்துப் பேர்கள் பாராட்டுகிறவர்களை அவர்களோடு சேர்ந்து நாமும் பாராட்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அப்படிப் பாராட்டுகின்றவர்கள், பாராட்டப்படுகின்றவர்களின் படைப்புகளைப் படித்திருப்பார்களோ! சந்தேகம்தான். என்றாலும் கூட்டத்தோடு கோவிந்தா! அவ்வளவுதான்.

     இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிலர் எழுதுகோல் ஏந்தி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நூல்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்த தவ முனிவர்களை வாழ வைக்கிற அன்பு வாசகர்களை கரங்கூப்பி வணங்க வேண்டும். நான் வணங்குகிறேன்!

     ‘கலைத்தோழன் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் – இந்நூலுள் அடங்கிய எல்லா சிறுகதைகளுமே மனித சமுதாயத்தின் உணர்வுகள்தான். எனவே வாசகர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள்.

நன்றி, வணக்கம்!

என்.ஏ. வேலாயுதம்.

Description

விரைவில் மின்னூலாக