கண்களும் கண்மணிகளும்

     பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் மீது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். விரிவாக விவாதித்திருக்கிறார். உரிய சான்றுகளும், புள்ளி விவரங்களும் ஆங்காங்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. பெண் குறித்த சமூகத்தின் பிற்போக்குப் பார்வை பல இடங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

     பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பெண்மை ஆண்மை என்று இரண்டுமே கற்பிதங்கள் தான். ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பது இயற்கை. ஆனால் பெண் எப்படி இருக்க வேண்டும், ஆண் எப்படி இருக்கலாம் என்பது செயற்கையாகக் கட்டமைக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடு தான், பாலியல் வல்லுறவு நிகழ்ந்தால், பெண்ணின் உடை, அவள் இருந்த இடம், நேரம் காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் போக்கு. “டேட்டிங் போவதாலோ, கவர்ச்சியான உடை அணிவதாலோ தான் ஆண்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது அக்மார்க் தவறு. இது ஆணாதிக்க நிலையின் உச்சம்” என மிகச்சரியாகவே எழுதுகிறார்.

      பெண்ணடிமைத்தனம் என்பது வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மட்டும் நிகழ்வது கிடையாது. பண்பாடு, இதனை நியாயப்படுத்தும், பெருமைப்படுத்தும் ஒரு முக்கிய காரணி. “வரலாறு நெடுகிலும் பெண்களின் உணர்வுகளும், உரிமைகளும் ஆணாதிக்கச் சமூகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படுகின்றன. பெண்களை அதிகாரம் அற்றவர்களாகவும், ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவும் வைத்துக் கொள்ளப் பண்பாடு, சடங்குகள் போன்ற கருத்தாக்கங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன” என்று பளிச்சென்றே கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

     தனித்து வாழும் பெண்கள், குறிப்பாகக் கணவனை இழந்தவர்கள் குறித்தும் நூல் பேசுகிறது. தமிழகத்தில் இவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது டாஸ்மாக் கடைகள், இதனால் இளம் விதவைகள் உருவாகிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதோடு, வாழ்க்கைத் துணையை இழப்பது ஆணாக இருந்தால் ஒரு மாதிரியும், பெண்ணாக இருந்தால் வேறொரு மாதிரியும் சமூகம் அணுகுவது குறித்தும் விமர்சிக்கப்படுகிறது. அவர்களின் பொருளாதார பிரச்சனை குழந்தைகளின் கல்வி, ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்பு போன்றவை முக்கியமானதாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சமத்துவம் பின்தள்ளப்படுவதால், பெண் கருக்கொலை, சிசுக் கொலை நடந்து வருவதும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்குச் சட்டமன்றத் நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு அவசியம் என்பது குறித்து ஒரு தனி அத்தியாயமே எழுதப்பட்டிருக்கிறது.

நிச்சயம் படிக்கலாம், பயன் பெறலாம்

Description

விரைவில் மின்னூலாக