குமரிக்கண்ட காலம்

     இராமரின் வரலாறு தேசிய வரலாறாய் இருப்பினும் அதைக் காவியமாக்கிய முதற்கவி வால்மீகி. தேசிய வரலாற்றை எழுதும் போது தன் மொழிப்பற்றையும், தன் மொழிப் பண்பாட்டையும் மெருகு ஏற்றும் உரிமை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உண்டு. அந்தவகையில் தான் கம்பர் தன் காப்பியத்தில் ‘தாரை’யைத் ‘தாயா’க்கியது போன்ற பல தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளைச் சேர்த்தார். சீதாபிராட்டி திருமணத்தைக் கூட தமிழர் திருமணம் களவு வழிப்பட்டது என்ற காரணத்தால் இராமனையும் சீதையையும் திருமணத்திற்கு முன்பே ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்னும் சூழலை உருவாக்க சீதாபிராட்டியைத் தோழியருடன் மாளிகையின் மேல் நிற்கவைத்து, இராமபிரானைத் தம்பியுடனும், விசுவாமித்திரருடனும் மிதிலை நகரத்துத் தெருவில் நடக்க வைத்து இருவரையும் மாறிப்புக்கிதயம் எய்த வைத்தார்.

     இந்த வகையில் தான் செல்வராமாணத்தில் குமரிக் கண்ட காலம் என்ற இந்தப் பகுதியும் அமைந்துள்ளது. மகேந்திரமலையில் இராமனும், வானரப் படையினரும் சீதாபிராட்டியைத் தேடி வந்திருக்கின்றனர். இது தேசிய வரலாற்றுச் செய்தி. இந்த இடத்தில் கம்பனுக்கு இருந்தது போன்ற உரிமை நம் கவிஞர் செல்வராசனுக்கும் கிடைக்கின்றது. இராமன் அனுமனுக்குக் கூறுவது போன்று இந்தப் பகுதியைச் செல்வராசன் படைத்துள்ளார். இந்த ‘குமரிக் கண்ட காலம்’ என்னும் பகுதி படைப்பாளியின் தாய் மொழிப்பற்றைப் பறைசாற்றுவதாகவும் அமைந்துள்ளது.

     இன்று, தமிழ் மாநில அளவில், மரபுக் கவிதை எழுதுவோர் மிகச் சிலரே! அவர்களுள் எல்லாம் முதன்மையானவர் இவர். ஏனெனில், இராமாயணக் கதையை ‘செல்வராமாயணம்’ என்ற பெயரில் எழுதி முடித்திருக்குமிவர் கம்பன் கூறாது விட்டுச் சென்ற பல்வேறு கருத்துக்களைக் கம்பனையே மிஞ்சுமளவில் படைத்திருக்கிறார். அதன் ஒரு பகுதியே, “குமரிக்கண்ட காலம்” என்னும் இந்நூல்.

     இந்நூல், செல்வராமாயணத்தின் ஓர் அங்கமாயினும், குமரிக்கண்டம் தொடர்பான சிறந்த ஆராய்ச்சி நூலுமாகும். எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் இந்நூலை முதன்மை நூலாகக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்குகையில் அவர்கள் தெள்ளத் தெளிவான முடிவுக்கு செல்ல இந்நூல் துணை நிற்கும்.

Category: Tag:

Description

E-Book Link