முதல் பாவலர் திருவள்ளுவர்

திருவள்ளுவரே நம் குருதேவன்

திருக்குறளே நம் வேதநூல்

     உலகத்தில் திருவள்ளுவர் போல் ஓர் அறிஞன் பிறந்ததும் இல்லை. திருக்குறள் போல் ஒரு நூல் தோன்றியதும் இல்லை. இவ்வளவு இருந்தும் கொடை வள்ளலின் மகன் பிச்சைக்காரன் ஆனால், எப்படி இருக்குமோ – அப்படி தமிழர் தாழ்ந்து கிடக்கின்றனர்.

     தமிழர் மொழி – பண்பாடு – வழிபாடு – ஆட்சி முதலிய யாவற்றிலும் அன்னியம்தான் தலைமை வகிக்கிறது. ஓர் இனம் அழிந்து போவதற்கு இது முன்னடையாளம். இந்த இழிவு தமிழர்க்கு நேரக்கூடாது என்பதற்காகத்தான் திருவள்ளுவர் தமிழ் மறையை நமக்கு வழங்கினார். ஆனால் நாமோ அதனை வாழ்வியல் நூலாகக் கொள்ளவில்லை. மனுநூலுக்கு மண்டியிட்ட தமிழன் தன் மறைநூலை மதிக்கவில்லை. தமிழர் வாழவில்லை! ‘பிழைப்பு’ மட்டுமே நடத்துகிறார்கள்!

*  *  * 

தமிழ் சமூகத்தின் காவல் அரணாக விளங்கும் திருக்குறள் தோன்றிய காலத்தில் இருந்தவை விட அபாயகரமான சூழ்நிலையில் தமிழன் இன்று இருக்கிறான். ஆழமாக எண்ணிப் பார்த்தால் இன்றும் தமிழர் வாழ்வைப் பாதுகாக்கும் ஆற்றல் உள்ள ஒரே துணை திருக்குறள்தான் என்பது புலனாகும். எனவே அதைத் தமிழ்ச் சமுதாயத்தின் முன் ஒரு புதிய பரிமாணத்தில் படைக்க வேண்டும் என்று தோன்றியதால் உருவான நூல்கள் இது.

*  *  * 

தமிழர் –

     மானம் – வீரம் – பகுத்தறிவு – தன்னம்பிக்கை – சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும் திறன் – அறிவின்மேல் நம்பிக்கை – செல்வப் பெருக்கம் – மூடநம்பிக்கைகளிலிருந்து மீட்சி – தலைமை ஏற்கும் திறன் ஆகியவற்றை பெற வேண்டும் அப்போதுதான் தமிழரின் மகோன்னதமான புதிய வரலாறு உருவாகும்.

     அதற்குத் திருக்குறளில் ஆழம் காணவும் – அதனை வாழ்வியல் நூலாக ஏற்கவும் வேண்டும். திருவள்ளுவர் முதற்பாவலர் ஆன தகைமையை விளக்கமாக அறிந்தால் தமிழரிடையே விழிப்புணர்வு துலங்கும். அது மீட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் ‘திருவள்ளுவர் முதல் பாவலர்’ நூலினைத் தமிழ் உலகுக்கு வழங்குகின்றோம்.

*  *  * 

     இது ஒரு கருத்துத் தொகுப்பு நூல். திருவள்ளுவரின் முதன்மைச் சிந்தனைகளைக் குறிப்பிடும் இடங்களில் முழுக் குறள்களையோ, உரைகளையோ விரிவாக எடுத்து ஆளாமல் குறள் எண்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. நூல் விரிவுக்கு அஞ்சி இந்த முறை கையாளப்பட்டுள்ளது. உரிய இடத்தில் பிறைவளைவுக் குறிக்குள் அதிகார எண், பாட்டு எண்கள் தரப்பட்டுள்ளன. தேவையானவர்கள் மூல நூலினைப் பயன்கொள்ளலாம். திருவள்ளுவரின் 190 முதற்சிந்தனைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

*  *  * 

     தேவர்கள் அமுதம் கடைந்தது கற்பனை

     திருவள்ளுவர் ஞானம் கடைந்தது உண்மை

     அதைக் கொண்டு தமிழ்ச் சமூகம் அமரத் தன்மை பெற வேண்டும்.

     உலகில் உள்ள எந்த சமய வேதத்தோடு ஒப்பிட்டாலும் திருக்குறள் அவற்றை விஞ்சி நிற்கிறது.

     எனவே தமிழர் இதை மறையாகக் கொள்ள வேண்டும்.

*  *  * 

     இந்த நூலினை ஆக்குவதற்குத் தமிழ் மாணவனாகிய நான் திருக்குறள் பற்றிய ஏராளமான ஆய்வுகளைக் கற்கும் வாய்ப்புப் பெற்றேன். அவற்றைப் படைத்த சான்றோர்களுக்கு

     நெஞ்சம் நிறைந்த நன்றி.

அன்பினால்,

கு. பச்சைமால்.

Category: Tag:

Description

E-Book Link