சேர நாட்டுச் சிந்தனைகள்

     சேரநாட்டுச் சிந்தனைகள் என்னும் இந்நூல் தெளிந்த நீரோட்டம் போன்று கவிதை நடையிலும், உரை நடையிலும் அமைந்துள்ளது. இதன் தோற்றம் காலத்தின் கட்டாயம்.

     நம்முடைய முன்னோர்கள் சார்பான பல வினாக்களுக்கு இந்நூல் விடை தருகின்றது. உதியன்குளங்கரை, அதங்கோடு, விளவங்கோடு, கோதையாறு, திருவனந்தபுரம், சேர்த்தலை, வஞ்சி, சங்ஙானச்சேரி, கொடுங்கலூர், கொங்குமண்டலம் முதலியன சார்பாக ஆசிரியர்தரும் விளக்கங்கள் பாராட்டுக்குரியவை.

     பாரதப்போர் நடந்து முடிந்துவிட்டது. அங்கே சேரநாட்டுப்படை ஒன்று உதியன் சேரலாதனது தலைமையில் அமைதிப்படையாகிச் சென்று நிறைகின்றது. இச்செந்தமிழ்ப் படையைக் கவிஞர்,

           தேன்பனை வரிசையா? அல்லது

           வான்படை வரிசையா? என்று வினவி

     நாமெல்லாம் வியக்கும்படி வைக்கின்றார்.

     களத்தில் குற்றுயிராகிக் கிடந்த இருதிறத்து வீரர்களுக்கும் சேரர்படை சோறு கொடுத்து உயிர்களைக் காத்து நிற்கின்றது.

     கண்ணகித் தெய்வத்துக்குக் கல்லினால் கோயில் செய்த செந்தமிழ்ச் செல்வன் செங்குட்டுவனது வீரமும் சொல்லினால் கோயில் செய்த இளங்கோவின் துறவும் அழகாக விளக்கப்படுகின்றன.

     கோயில் வரலாறுகளைத் தேடிப் பல முத்துக்களைக் கோர்த்துத்தந்த விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. கண்ணகி வரலாற்றை விளக்கும் விதம் வியக்க வைக்கின்றது.

     சேரநாட்டின் ஒரு பகுதியாக பொறைநாட்டுக்கு இளவரசனாகிப் பின்னர் தருணம் வருகின்ற பொழுது சேரநாட்டின் முடி மன்னனாகப் பொறுப்பேற்றுக் கொண்டவன் பொறையன். பொறை நாடன், இரும்பொறை என்றெல்லாம் அழைக்கப்பட்டான். முல்லை நிலத்தை ஆளும் உரிமை பெற்றவன் குறும்பொறை நாடன். பொறையன், பொறை நாடன், இரும்பொறை என்னும் இப்பெயர்கள் குறும்பொறை நாடன் என்னும் பெயரில் இருந்து பிறந்தவை.

     குறிஞ்சி நிலத்தை ஆண்டவன் மலை நாடன். முல்லை நிலத்தை ஆண்டவன் குறும்பொறை நாடன். இந்த நாடன் என்ற சொல்லே நாடான் என்றும் நாடார் என்றும் ஆயிற்று என்ற ஆசிரியரது விவாதத்தை மறுக்க முடியாது. இதனை ஆசிரியர் சான்றுகள் தந்து விளக்குகின்றார். ஆனால் பண்டைத் தமிழகத்தில் சாதிவேறுபாடுகள் இல்லையென்றும் இந்நூலில் விளக்கப்படுகின்றது.

     தளபதி நேசமணி அவர்களின் மறைவின்போது கவியரசு கண்ணதாசன் இரங்கல்பா ஒன்று பாடினார். அதில் நேசமணியைப் பாண்டி முடித்திரு மன்னர் குலத்தவர் என்று குறிப்பிட்டார். இது நமது கருத்துக்கு அரண் சேர்ப்பதாகும்.

     ஈழவர், தீயர், நாடார் ஆகியோர் சேர மன்னர்களின் வழிவந்தவர்கள் என்று ஆசிரியர் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் இவர்கள் வர்மாக்களின் ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிவிட்டனர். இவர்களது சமுதாய விடுதலை, சமய விடுதலை, பொருளியல் விடுதலைக்காக நாராயணகுரு அவர்களும், முத்துகுட்டி சுவாமி அவர்களும் போராடினார் என்பதனை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.

Description

விரைவில் மின்னூலாக