Description
E-Book Link
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்களில் மிகச் சிறந்த தமிழ் அறிஞராகவும், கவிஞராகவும், நாடக ஆசிரியராகவும் உலா வந்து கொண்டிருப்பவர் அறிஞர் கு. சுயம்புலிங்கம்.
தனக்கென வாழாது தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காவும் தமிழ் நாட்டிற்காகவும் தன்னை அர்பணித்து வாழ்ந்து வருபவர் இவர்.
சாதி சமயத்துக்கு அப்பாற்பட்டுச் செயலாற்றிக் கொண்டிருக்கும் மிகச்சில தமிழறிஞர்களில் இவரும் ஒருவர்.
இவர் ஏற்கனவே இதற்குமுன்னர்க் ‘கலைமதி’, ‘தமிழ்த்தொண்டர் வரலாறு’, என்னும் இரு நாடக இலக்கியங்களை அன்னைத் தமிழுக்குப் படைத்துள்ளார். பல கவிதைத் தொகுதிகளால் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்தவர்.
இவரது படைப்புகள் தமிழின பெருமையினை – தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்பினை – தமிழர் நாகரிகத் தொன்மையினை ஒலித்துக் கொண்டிருப்பவை.
“என்னைப் பழிப்பவனை நான் எதுவும் நினைப்பதில்லை! அம்மா! உன்னைப் பகைப்பவனை உள்ளம் பகையாய் நினைக்குதம்மா!” எனத் தமிழை நினைத்துப் பாடிய கவிஞன் ஒருவரின் கவிதை வரிகளுக்குக் கவிஞர் கு. சுயம்புலிங்கம் இலக்கணமாய்த் திகழ்கிறார் எனில் அது மிகை அல்ல!
கவிஞர் கு. சுயம்புலிங்கத்தின் ‘தாய்மைத் தமிழ்’ கவிதை நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். அதில் அவர்தம் தமிழ்ப்பற்றுத் தெள்ளத் தெளிவாகப் பளிச்சிடுகிறது.
நாடக அமைப்பு புதியது
நாடகப்பாணி புதியது
நாடக உத்தி புதியது
சில நாடகங்கள் நடிப்பதற்கு மட்டுமே ஏற்றவை. சில நாடகங்கள் படிப்பதற்கு மட்டுமே ஏற்றவை. கவிஞர் கு. சுயம்புலிங்கத்தின் ‘தாய்மைத் தமிழ்’ நாடகம் நடிப்பதற்கும், படிப்பதற்கும் ஏற்ற வகையைச் சார்ந்தது.
நாடகங்களில் கையாளப்பட்ட மொழி நடையை வைத்துக் கூறுவதெனில் இஃது 90 விழுக்காடும் கவிதையால் புனையப்பட்ட கவிதை நாடகமெனலாம்.
தாய்மைத் தமிழ் நாடகம் ஒரு வரலாற்றைச் சொல்வதற்காகவோ அல்லது சமூகக் கதையை அல்லது குடும்பக் கதையைச் சொல்வதற்காகவோ எழுதப்பட்ட துன்பியல் நாடகமோ அல்லது இன்பியல் நாடகமோ அல்ல. இது நாடக உலகுக்கு முற்றிலும் புதியது. பொருள் புதியது. கவிஞர் கு. சுயம்புலிங்கம் தனக்கே உரித்தான புதிய பாணியில் இந்நாடகத்தைப் படைத்துள்ளார். நான்கு பேரும் ஆய்வுகளையும் மற்றும் வேறுசில ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காகவே இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது.
– பேராசிரியர் முனைவர் மு. ஆல்பன்ஸ் நதானியேல்
E-Book Link