குற்றவாளியா தானாபதிபிள்ளை..? (மறைக்கப்பட்ட வரலாறு)

     இந்திய வரலாற்றை எழுதிய வின்சென்ட் ஸ்மித், “கங்கைக் கரையிலிருந்து இந்திய வரலாற்றைத் தொடங்குவது சரியல்ல: காவிரி கரையிலிருந்து தொடங்க வேண்டும்” என்னும் விமர்சனம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்துவிட்டது. ஆரம்பகால வரலாற்று ஆசிரியர்களில் குறிப்பாக ஐரோப்பிய அறிஞர்களில் பெரும்பாலோர் இந்திய வரலாற்றுக்கு ஐரோப்பியர்களின் பதிவுகளையே ஆதரமாக கொண்டிருந்ததன் தவறுகளைச் சுட்டிக் காட்டும் முயற்சி அண்மையில் தான் தொடங்கி இருக்கிறது. -“வரலாறு என்பது சார்பானது” என்னும் பழைய மொழிக்கு இன்னும் விதிவிலக்கு உருவாகவில்லை.

     கட்டபொம்மனின் வரலாற்றை எழுதியவர்கள் தட்சண சரித்திரம் (ஆரம்), ராணுவ நடவடிக்கைகளின் நினைவுகள் (கர்னல்.வெல்ஸ்), திருநெல்வேலி சரித்திரம் (ஸ்டூவர்டு), மதுரை மேனுவேல் (நெல்சன்), டெய்லரின் கையெழுத்து பிரதிகள், திருநெல்வேலி மேனுவேல் (பேட்), பாளையக்காரர்கள் வரலாறு (கிரான்), திருநெல்வேலி வரலாறு (கால்டுவெல்) ஆகியவற்றையே ஆதாரமாகக் கொண்டிருந்தார்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராசிரியர் நா.வானமாமலை கட்டபொம்மனைப் பற்றி எப்படி உண்மையான வரலாற்றை உருவாக்க முடியும் என்று கேட்கிறார்.

     பாஞ்சாலங்குறிச்சிப் போரில் நேரடித் தொடர்புடையவன் வெல்ஸ். இவனுக்குக் கட்டபொம்மனிடம் தனிப்பட்ட விதத்தில் விரோதம் உண்டு. வெல்ஸ் ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்தில் குடியேறியபோது தான் தட்சணசரித்திரத்தைத் தன் ஞாபகத்திலிருந்தே எழுதியிருக்கிறான். அப்படியானால் வெல்ஸின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

     கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களில் பலர் இங்கிலாந்தில் இருந்த தங்களின் மனைவி, சகோதரர், நண்பர்கள் போன்றோருக்கு எழுதிய கடிதங்களும் அச்சில் வந்துள்ளன. இவையே பிற்காலத்தில் ஆவணங்களாகக் கருதப்பட்டன. முழுக்கவும் ஒருபக்க சார்புடைய இந்த ஆவணங்களில் தகவல் பிழைகள் பெருமளவில் இருப்பதும், இப்போது புனர்பரிசீலனை செய்யப்படுகிறது.

     ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி, தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையும், எதிர்த்தவர்களையும் தூக்கில் போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொன்ற பிறகு பிணத்தை எந்த அடையாளமும் இன்றி, எரித்துவிடுவதும் அவர்கள் தொடர்பான சாட்சியங்களையும் நினைவுகளையும் அழித்துவிடுவதனையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

     கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பு, அவரது மனைவி சக்கம்மா, தங்க நகைகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் கோசுமுண்டு (ஆந்திரா) என்ற ஊரில் வாழ்ந்த தன் உறவினர் ஒருவரிடம் பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்தாள். இச்செய்தியை எட்டப்ப வம்சத்து பாளையக்காரர் ஒருவரின் உதவியால் மேஜர் பானர்மேன் அந்த நகைகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் கைப்பற்றி வெள்ளைச் சீமாட்டிகளுக்கு விற்றுவிட்டான். செப்புப் பட்டயங்களையும், ஓலை ஆவணங்களையும் எரித்தான். இது ஒரு உதாரணம். ஊமைத்துரை, கான்சாகிப், வேலுத்தம்பி தளவாய், மருதுசகோதரர்கள் என பலருக்கும் இது பொருந்தும்.

      இப்படியாகத் தங்களை எதிர்த்தவர்களின் அடையாளங்களை அழிப்பது, அவர்களைப் பற்றிய தவறான வரலாற்றை எழுதுவது என இரண்டு காரியங்களையும் ஒரே சமயத்தில் செய்த ஐரோப்பியர்களின் பதிவுகளை வைத்துக் கொண்டு உண்மை வரலாற்றை எப்படி எழுத முடியும்? தானாபதிபிள்ளை என்ற சிவசுப்பிரமணியபிள்ளையின் வரலாற்று செய்திகளும் இப்படியாக அறிவிக்கப்பட்டவையே என்று கருதுவதற்கு வலுவான ஆதாரங்களே இவை அனைத்தும்.

     இதனால் தான் நாட்டார் வழக்காறுகளையும், வரலாற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்வது நல்லது என்ற எண்ணம் எழுபதுகளில் ஆழமாக உருவானது என்றாலும், தமிழக வரலாற்று ஆசிரியர்கள் இதில் பாரபட்சமாகவே இருந்தனர்.  பழைய வரலாறுகளைப் பதிவு செய்த நாட்டார் கவிஞர்களிடமும் ஒருதலைபட்சமான எண்ணம் உண்டு என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

     கட்டபொம்மனை இழிவுபடுத்தும் வழக்காறுகளும் உண்டு. இது அவன் வீரம் தொடர்பானது அல்ல. தனி வாழ்வு தொடர்பானது. இதுபற்றிய வழக்காற்றுக் கதைகளும், பாடல்களும் தானாபதிபிள்ளையை உயர்த்தியே கூறுகின்றன. கட்டபொம்மனை வெள்ளைக்காரன் தூக்கில் போட்டுவிட்டு பிணத்தைத் தரையில் போடாமல் மாட்டுவண்டியில் கொண்டு சென்றுவிட்டான். ஆனால் தானாபதிபிள்ளையைத் தூக்கிலே போட்டு அவரது தலையை வெட்டி எடுத்து நீண்ட வேலில் குத்தி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் முன் நட்டான். இது போன்ற செய்திகளைக் கூறும் நாட்டார் பாடகன் சற்று உரக்கவே பாடுகிறான்.

     கட்டபொம்மன் தொடர்பாக இருபத்தியேழுக்கும் மேற்பட்ட கதைப்பாடல்கள் உள்ளன. இவற்றில் பதினாறு கதைப்பாடல்கள் தான் அச்சில் வந்துள்ளன. நெற்கொள்ளை நிகழ்ச்சியைக் கட்டபொம்மன் கும்மி (1958), கட்டபொம்மன் வரலாறு (1960), வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல் (1971), கட்டபொம்மன் கூத்து (1972) ஆகிய பாடல்கள் மிகச் சுருக்கமாக “நெல்லை அள்ளி வந்தார்” என்றே பாடுகின்றன.

     ஆனால் கட்டபொம்மன் கதைப்பாடல் (1961), கட்டபொம்மன் கும்மி பாடல் (1978), கட்டபொம்மன் கும்மி பாடல் (1983) ஆகிய பாடல்கள் மட்டும் தான் திருவைகுண்டம் நெற்கொள்ளை என குறிப்பிடுகிறது. இக்கதைப்பாடல்கள் நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ளன. நெற்கொள்ளையில் உயிரிழந்த படைத்தலைவன் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு மிகுதியாக வசிப்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் பாட்டின் மூலம் விரிவடைவது இயற்கைதான். சுருங்கச் சொல்லின் கட்டபொம்மன் கதைப்பாடல்களில் பெரும்பாலானவை தானாபதிபிள்ளையின் வீரத்தை உயர்த்தியே பேசுகின்றன.

“தேசுகன் புகழ்பெற்ற தானாபதிபிள்ளை:”

“தீரன் சுப்பிரமணியபிள்ளை”

     என்கிறது ஒரு கும்மிப்பாட்டு.

“கும்பனியானை கொன்று நெல் எடுத்த தீரன்பிள்ளை”

     என்கிறது ஒரு அம்மானை.

       கிழக்கிந்தியக் கம்பெனியார் நெல்லைச் சேகரித்து வைத்திருந்த இடத்தின் காவலாளி பாண்டித்தேவனைக் கொன்று நெல்லை கவர்ந்த செய்தியை இக்கதைப்பாடல்கள் விரிவாகவே கூறுகின்றன. இக்கொள்ளையின் போது, பிள்ளையின் பக்கம் இருந்த காலடி வீரர்களும் இறந்தனர். இச்செய்திகள் பிற்காலத்தில் ஜாதி சாயம் பூசி திரிக்கப்பட்டதால், தானாபதிபிள்ளையின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும்படி ஆயிற்று.

       இந்த நிலையில், ஜனனி.ஜெ.நாராயணன் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்ட முன்வந்துள்ளார். இவரது இந்நூல் சிறு அறிமுகம் தான். இதுபோன்ற மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிகொண்டு வருவதற்கு இது ஒரு நல்ல முயற்சி. இவர் பெருமளவில் வாய்மொழி தகவல்களைச் சேகரித்திருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் இவரது பணி தொடரட்டும்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக