வசந்தகாலம்

     தனக்கான கவிஞர்களைத் தமிழ் காலந்தோறும் தயாரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியச் செழுமைக்கு ஈடில்லாத் தமிழ்ப்புலமை கொண்ட புலவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இந்த நெடுமரபின் கடைக்கோடியான நாம் வாழ்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் ‘செல்வராமாயணம்’ என்ற அற்புதப் படைப்பைக் கவிஞர் த. செல்வராசன் அவர்கள் தந்திருக்கிறார்கள்.

     இந்நூலைப் புரட்டும் பக்கங்களிலெல்லாம் புரண்டோடுகிறது கற்பனை வெள்ளம். இராமகதைக்கு மகுடம் தயாரிக்கும் பணியைக் கம்பன் செய்தானென்றால், அதில் இரத்தினக்கல் பதிக்கும் வேலையை கவிஞர் த. செல்வராசன் செய்திருக்கிறார் எனலாம்.

     64 காலங்களையும், 9 பருவங்களையும் கொண்ட பெரும் இலக்கியப் படைப்பான ‘செல்வ ராமாயணத்தின், ஓர் அங்கமாக இந்நூல் வெளிவருகிறது. பஞ்சவடிப் பருவத்தின் ஓரங்கமாக விளங்குகின்ற பகுதி ‘வசந்த காலம்’ என்னும் தலைப்பில் நூலாகி வெளிவருகின்றது. வாசிக்கும் ஒவ்வொரு பாடலும் வசீகரத் தன்மையுடன் நம்மை வசியப்படுத்துகின்றன. குறிப்பாக, இந்நூலில் இயற்கை சார்ந்தும், பூக்கள் சார்ந்தும் கற்பனைச் செறிவுடன் வடித்துள்ள சொல்லோவியங்கள் ரசிக்க வைக்கின்றன.

     கொடியில் ஒரு பூவின் வருகை வசந்த காலத்தின் வரவேற்புச் சின்னமாவது போல், இந்தப் புத்தகத்தின் வருகை இலக்கிய உலகில் வசந்த காலத்தை வரவழைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. காரணம், இந்தப் புத்தகத்தில் புரட்டும் பக்கமெல்லாம் பூக்கள் மணக்கின்றன. தொண்ணூற்றொன்பது பூக்களைக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தோராயமாகத் தொகுத்திருந்தாலும், இரண்டு பூக்களை இன்னும் சேர்த்து 101 பூக்களாகக் கொடுத்து இலக்கிய உலகத்துக்கு மொய்வைத்திருக்கிறார் கவிஞர் த. செல்வராசன் அவர்கள்.

     எந்தப் பாடலை எடுத்தாலும் மோனைகளின் முதுகைக் கட்டிப் பிடித்துக் கொண்டு எதுகைகள் முத்தமிடுவதைக் காண முடிகிறது. சந்த நயத்துக்கு உயிர்கூட்டும் இயைபுத் தொடைகள் ஆசிரியரின் புலமைத் திறத்தைப் புலர்காலை வெளிச்சமாக்குகின்றன. யாப்புச் சிதையாக பாடல்களில் வார்த்தைகள் பூப்படைந்து புன்னகைக்கின்றன.

     மரபுக் கவிதைகள் மறுக்கப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், துணிச்சலுடன் மரபின் பல்வேறு வடிவங்களை மிக அற்புதமாகக் கையாண்டு படிப்பவர்களின் மனதைக் கொள்ளைகொள்கிறார்.

Category: Tag:

Description

E-Book Link