SUYAMBU LINGAM

கவிஞர் கு. சுயம்பு லிங்கம்

நிறுவனர், தமிழ் நல மன்றம்

       07-03-1951 -இல் கன்னியாக்குமரி மாவட்டம், அகத்தீசுவரம் வட்டம், மேலச்சூரன்குடி என்னும் கிராமத்தில் பிறந்தேன். தந்தை திரு. குருநாத மார்த்தாண்டன். அவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் அறிந்தவர். தென்னெல்லைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர் அவர். தமிழ்ப் பற்று மிக்கவர். தாய் திருமதி. நா. இலக்குமி. உடன்பிறந்தோர் ஐவர். ஆண்கள் இருவர். பெண்கள் மூவர்.

     அகவை 13-ல் எட்டாம் வகுப்பு படித்தபோது ‘கருடன்’ இதழில் வெண்பாப் போட்டியில் கலந்து கொண்டு ‘உலகமினி உய்ய வழி’ என்னும் வெண்பா ஈற்றடிக்கு வெண்பா எழுதியது முதல் தொடக்கமானது.

     என் தந்தை என்னுள் விதைத்த ‘தமிழ்ப்பற்று’ என்னும் விதை முளைத்துக் கிளைத்து வானளாவ ஆலமரம் போல் வளர்ந்து விட்டது. ஆசிரியப் பெருமக்கள் – தமிழ் அறிஞர்கள் ‘தமிழார்வம்’ என்னும் நீருற்றி வளர்த்து விட்டனர். அதுவே என்னை நாடகங்களில் நடிக்க வைத்தது. சில நாடகங்களை இயக்க வைத்தது. கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் படைக்க வைத்தது.

     நான் கன்னியாக்குமரி மாவட்டம், நாகர்கோவில் இராமன்புதூர் கார்மல் பள்ளியில் உயர்நிலை வகுப்பில் 10-ஆம் வகுப்பு படித்த போது 1966-67 -ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் ஓர் உள்நாட்டுப் போர் போல நடந்தது. என் தந்தை “பிறமொழி மேலாண்மையால் தமிழ் அழிந்து போகும். சேர நாடாகச் செந்தமிழ் நாடாக இருந்த இன்றைய கேரளம் சமற்கிருத மொழி மேலாண்மையால் மலையாளமாகத் திரிந்து போனது. இந்தி தமிழ் மொழியை மேலாண்மை செய்தால் – தமிழர்கள் இந்தி பேசுபவர்களாக மாறிப்போவார்கள்” என கூறினார். பள்ளிப் பருவத்தில் தமிழை அழியாமல் காக்க வேண்டும் என்னும் வெறி என்னுள் குடி கொண்டது. தீவிரமாக இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டேன். போராட்டத்தின் போது பள்ளிக்கு வந்ததும் கார்மல் பள்ளியில் எழில்மிக்க விளையாட்டு மைதானத்தில் மாணவர் நாங்கள் கூடுவோம். ‘தினத்தந்தி’ நாளிதழைச் சேர்த்து சுற்றி நின்று படிப்போம். இந்தி எதிர்ப்புச் செய்திகள் தினந்தந்தி நாளிதழில் விளக்கமாகப் போடப்பட்டிருக்கும். எங்களுக்குள் வெறி குடி கொள்ளும். ‘ஓ’ எனக் கத்திக் கொண்டு பள்ளியை இழுத்து மூடிவிட்டு சாலைக்கு வருவோம். பள்ளிகளை மூடச்சொல்லி இரைச்சலிடுவோம். மூடாத பள்ளிகளைக் கல்லெடுத்து வீசுவோம். நாங்கள் சாரை சாரையாக ஆர்ப்பரித்துச் சென்ற போது என் முன் சென்ற மாணவர் துப்பாக்கியால் காலில் சுடப்பட்டுச் சரிந்தார். நான் தப்பித்துக் கொண்டேன். இந்தியை நாம் விரட்டி அடித்தால் – அந்த இடத்தல் தமிழ் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்தியின் இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொண்டது.

     பி.ஏ பட்டப்படிப்பு முதலாமாண்டில் இந்தத் தமிழ் வெறியை எல்லாம் ஒன்று திரட்டி – தமிழுணர்வைத் தமிழர்களிடையே தட்டி எழுப்பும் விதமாக ஒரு கவிதைச் சிற்றிலக்கியம் ‘தமிழ்ப்பாவை’ படைத்தேன். அந்நூலை இன்று படித்தாலும் தமிழுணர்வு பீறிட்டு எழும். தொடர்ச்சியாக ‘கலைமதி (கவிதை நாடகம்)’, ‘தமிழ்த் தொண்டர் வரலாறு (கவிதை நாடகம்)’, ‘தாய்மைத் தமிழ் (கவிதை நாடகம்)’ என நாடக நூற்களால் அன்னைத் தமிழின் திருவடிகளை அணிசெய்தேன். புத்தகம் வெளியிடும் போது என் பெற்றோர்களே பெரும் உதவியாய் இருந்தனர். பக்க பலமும் அவர்களாகவே இருந்தனர்.

     சில வருடங்கள், சென்னையில் திரைப்பட பாடல்கள் எழுத வாய்ப்பு தேடிய முயற்சி தோல்வியில் முடிந்தது. 6 வருட தேடலில் எந்த பயனும் இல்லாமல் போனது.

     1984 -இல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றுச் செயல் அலுவலராகப் பணியமர்த்தப் பட்டேன். திருக்கோயில்களில் தேவார – திருவாசக – ஆழ்வார் பாசுரங்களை விழாக் காலங்களில் பாட வைத்துத் தமிழ்ப்பற்றைத் தமிழர்களுக்கு ஊட்டுவதில் கவனமாக இருந்தேன். ஓய்வுக் காலங்களில் தமிழ்க் கவிதைகள் புனைந்து நூலாக வெளியிட்டேன்.

      பெற்றோரின் விருப்பப்படி கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்த ‘வாசுகி’ –யை வாழ்க்கைத் துணைவியாக கைபிடித்து ஏற்றுக்கொண்டேன். இன்றைக்கு வரை என் வெற்றிகளின் அடித்தளமாகவும், தோல்விகளில் துணையாகவும் இருந்து வருகிறார். எனக்கு 3 குழந்தைகள். மூவரும் தமிழ் பற்றுள்ளவர்களாக இருந்து வருகின்றனர். கவிதைகள் புனைவதிலும் ஆர்வம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

     பாளையங்கோட்டையில் பணிபுரிந்த போது தமிழ் ஆர்வலர்கள் என்னை ‘நெல்லை மாவட்டக் கவிஞர் பேரவைத் தலைவராக (2003 வரை)’ தேர்ந்தெடுத்தார்கள்.

     தமிழின் பெருமைகளை உலக அரங்கில் நிறுவிய ‘மொழி ஞாயிறு’ தேவநேயப் பாவணர்க்கு நூற்றாண்டு விழா என் சொந்த செலவில் எடுத்தேன். பள்ளி, கல்லூரி மாணவர்கட்குத் தேவநேய பாவணர் தொடர்பான பேச்சுப்போட்டி – கட்டுரைப்போட்டி – கவிதைப்போட்டி நடத்தியும், கருத்தரங்கம் நடத்தியும் தேவநேயப் பாவணர் புகழ் பரவ இயன்றதை செய்தேன்.

     தமிழ் நல மன்றம் என்ற ஓர் இலக்கிய அமைப்பை 2008 -இல் நிறுவினேன். 2009 -இல் பணி ஓய்வு பெற்ற பிறகு தமிழ் வளர்ச்சியில் தீவிரமாக, முழுநேரமாக ஈடுபட்டு வருகிறேன். தமிழ் நல மன்றம் தமிழின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைக்கும் பணியை அரங்கத்திலும் – தமிழுக்கும், தமிழர்களுக்கும் தீங்கு ஏற்படும் நேரங்களில் களத்திலும் பணிசெய்து வருகிறது.

     18.12.2016 அன்று தென்எல்லை வடஎல்லைப் போராட்டத்திற்குப் பின் அமைந்த தமிழ்நாட்டின் அகவை 60-ஐ வைர விழாவாக எமது தமிழ் நல மன்றம் கொண்டாடியது.

     நெல்லை மாவட்டச் சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் எனக்கு ‘கவிஞர் திலகம்’ விருது வழங்கியது. குமரி மாவட்ட திருவள்ளுவர் திருச்சபை 2004 -ஆம் ஆண்டு நடத்திய சிறந்த கவிஞர்களுக்கான போட்டியில் என்னை தேர்வு செய்து ‘தமிழ்த்தொண்டர்’ விருது வழங்கியது. ‘முதற்சங்கு’ இதழ் நடத்திய விழாவில் சாகித்ய அகடமி விருது பெற்ற திரு. பொன்னீலன் அவர்களால் எனக்கு ‘நாடகக் கவிபேரரசர்’ விருது வழங்கப்பட்டது. ‘கவிதை உறவு’ இதழ், சென்னை முகப்பேரில் வைத்து நடத்திய படைப்பாளர் அறிமுக விழாவில் – மாண்பமை நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள் தலைமை தாங்கி என்னை ‘தமிழில் சேக்சுபியர்’ எனப் பாராட்டிச் சிறப்பித்தார்.

     தந்தை காட்டிய வழியில் அன்றும், இன்றும் தொடர்கிறது என் தமிழ்ப்பணி.

 

Author’s Books

Get in Touch