Dr. T. SELVARAJ

முனைவர் த. செல்வராசன்

     நான் பிறந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் அருகில் உள்ள எட்டுக்கூட்டுத்தேரிவிளை. எனது தந்தையார் திரு. ஆ. தங்கநாடார் என்ற தங்கசுவாமி நாடார். தாயார் பெயர் சி. செல்லத்தங்கம் என்ற தங்கமணி. எனது பிறந்த நாள்: 18.3.1968 ஆகும். ஒரு மூத்த சகோதரியும், இரு தம்பியரும் என்னுடன் பிறந்த சகோதர உறவுகள் ஆவர். சகோதரி பெயர் த. இராஜகுமாரி. மூத்த தம்பி செல்வகுமார், இளைய தம்பி பெயர் ஆதிமகாலிங்கம்.

     பள்ளிப் பருவத்தில் இருந்தே தமிழில் ஆர்வம் இருந்தது. பள்ளியில் எனது தமிழாசிரியர்களான திரு. தமிழ் ராஜ், திரு. ஜோசப், போன்றோர் எனது ஆர்வத்திற்குக் காரணமாக இருந்தனர். கல்லுாரி அளவில் எனது தமிழார்வத்திற்குத் தீனி போட்டு, மரபுக் கவிதை எழுத பயிற்சியும் தந்து வளர்த்தவர்கள் எனது தமிழாசான் முனைவர் திரு. பொன்னுலிங்கம் மற்றும், விவேகானந்தா கல்லுாரி, அகத்தீசுவரம் சார்ந்த அனைத்துத் தமிழ்த் துறைப் பேராசிரியர்களும் ஆவர்.

     எனது கல்வித் தகுதி தாவரவியல் துறையில் ஆய்வுப் பட்டம் Ph.D. மற்றும், நான்கு மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டமை (Post doctororal programs) ஆகும். முதுநிலைப் பட்டத்தை (Master degree) தாவரவியலில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசியிலும், Master of Philosophy in Botany – ஐ  பூண்டி புட்பம் கல்லுாரி, தஞ்சாவூர் மாவட்டத்திலும், ஆய்வுப் பட்டம் Ph.D. ஐ 2000 ஆவது ஆண்டு தாவரவியல் உயர் கல்வி மையம், சென்னைப் பல்கலைக் கழகம், கிண்டி வளாகத்திலும், Post doctoral Programmes – ல் இரண்டை தென் கொரியப் பல்கலைக் கழகமான சுன்சான் தேசியப் பல்கலைக் கழகம், சுன்சான், தென் கொரியா விலும் (2002 முதல் 2006 வரை), மூன்றாவது Post doctoral Programme – ஐ கடல்சார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், இராசாக்கமங்கலத்திலும் (2007 முதல் 2010 வரை), நான்காவது Post doctoral Prgramme – ஐ தென் அமெரிக்க நாடான ஈகுவடார் நாட்டின் அரசின் கீழ் இயங்கும் SENESCYT என்ற அமைப்பின் கீழ் Prometeo Investigador என்று ஸ்பானிசு மொழியில் வழங்கப்படும் Prometeo Scientist ஆகவும் மேற்கொண்டேன் (2014 முதல் 2015 வரை). மேற்கூறிய நான்கு மேம்பட்ட ஆய்வுகளிலும் விஞ்ஞானியாகத் திகழ்ந்தேன். எனது சிறப்பு ஆய்வுப் பகுதி ‘வேர்ப் பூஞ்சைகள்’ என்றழைக்கப்படும் Arbuscular Mycorrhizal Fungi ஆகும். இதில் 4 புத்தகங்கள் வெளியாகியுள்ளன. 50 க்கும் மேற்பட்ட ஆய்வு வெளியீடுகளும் சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன.

     சிறுவயதில் மிகவும் அன்புடன் ‘அய்யா’ என்று நாங்கள் அழைத்த எனது தந்தையின் அப்பா திரு. சு. ஆறுமுகக்கண் நாடார் அவர்களின் தோளில் துாங்கி அவர் பாட்டாகவே சொல்லும் இராமாயணக் கதைகளைக் கேட்டு வளர்ந்த காரணமே எனது இராமாயணக் கவிதைகளுக்கு அடிப்படை என உறுதியாகச் சொல்வேன். எனது அய்யா பட்டதாரியாக இல்லாவிட்டாலும், நிறைய ஏட்டுச் சுவடிகளைப் படித்துணர்ந்த படிப்பாளியாக இருந்தார். தனி மனித ஒழுக்கமும், உண்மையும், நேர்மையும் மிக்க, ‘சடையர் சுவாமி’ என்று மக்களால் நேசிக்கப் பட்ட அய்யாவழி என்றழைக்கப்படும் அய்யா வைகுண்ட சுவாமியின் பக்தரான அற்புதமான மனிதர் அவர். அவரே என்னை ஆக்கி வைத்தார்.

     விவேகானந்தா கல்லுாரியில் இளங்கலைத் தாவரவியல் பயிலும் போதே அடிக்கடி தொலை துாரத்தில் அணில்கள் வாயில் வேப்ப மரத்தின் கனிகளைக் கவ்விக் கொண்டு தரையிலும், மரங்களுக்கு இடையிலும் விரையும் காட்சிகள் இராமாயணத்தில் சேது அணை கட்டுவதற்கு அணில்கள் சிறு கற்களைக் கொண்டு செல்வது போல் எனக்குத் தோன்றி, இராமாயணக் காட்சிகளாகக் கண்முன்னே விரிந்து அழகிய கவிதையாக வார்த்தைகள் கோர்த்து வந்தன. ஆனால் நான் அவற்றை எழுதவில்லை. காரணம், “ஒன்றுமே தெரியாத நான் யார் அதை எழுத?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டு வந்தேன். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகம், கிண்டி வளாகத்தில் ஆய்வுக் கல்வி பயிலும் நாட்களில் எனக்குள் விரிந்த அந்தக் காட்சிகளை எழுத ஆரம்பித்தேன். விவேகானந்தா கல்லுாரியின் தமிழ்ப் பேராசிரியர்கள் எனக்குச் சொல்லித் தந்த மரபுக் கவிதைப் பயிற்சி அதற்கு மிகவும் உதவியாக அமைந்தன.

     சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1993 முதல் 1995 வரை என்னை ஒரு கவிஞனாக அடையாளம் காட்டிக் கொள்ளாமல்தான் இருந்தேன். காரணம், கவிஞன் என்று என்னை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டால், “ஆய்வுக் கல்வி கற்பதற்கு நீ தகுதியற்றவன்” என்று என்னைத் துரத்தி விடுவார்களோ? என்ற அச்சம் தான். ஆயினும் என்னையும் மீறி அவ்வயதில் ஏற்பட்ட காதல் அனுபவமும் என்னைத் துாண்ட, 1996 ல் அங்கே என்னுள் இருந்த கவிஞன் வெளிப்பட்டான். அதில் நகைப்பிற்குரிய செய்தி என்னவென்றால், நான் எழுதிய இராமாயணக் கவிதை ஒன்றை வாசித்துக் காட்டியதனால், “இவன் விஞ்ஞானியாகி பெருஞ்செல்வம் சம்பாதிக்கத் துப்பில்லாத வெறும் கவிஞனாக இருக்கிறான். எனவே, இவன் நமக்கு ஏற்றவன் இல்லை” என்று நான் காதலித்த அவள் எண்ண, அந்தக் காதலின் ஆயுளும் அன்றோடு முடிந்து போனது. அதன் பின்னர் 1998-ல் அங்கே எனது ஆய்வைச் சமர்ப்பிக்கும் வரையிலும் பேராசிரியர்களான மதிப்பிற்குரிய காலம் சென்ற முனைவர் மகாதேவன், மற்றும் எனது ஆசிரியர் முனைவர் இராமன் போன்றோர் வியந்து பாராட்டும் அளவில் எனக்கு அங்கே கவிஞன் என்னும் அங்கீகாரம் சிறப்பாகக் கிடைத்தது. என்னை வெறுத்தவர்களும் எனது கவிதைகளைப் பெருமையாகப் பேசிய சில நிகழ்வுகளையும் நேரில் கண்டேன்.

      என்னை நன்கு பொலிவடையச் செய்த பெருமை குமரி மாவட்டம், கொட்டாரம் ஊரில் செயல்பட்டு வரும் எங்கள் “தமிழ்நாடு கலை இலக்கியக் கழகம்” – ஐச் சாரும். வெறும் சந்தக் கவியாக மட்டுமே இருந்த என்னை இலக்கணப் பிழையின்றி பல்வேறு வகையான பாக்களை எழுத வைத்தப் பெருமை எமது இலக்கிய அமைப்பாகிய இந்த இலக்கியக் கழகத்தையே சாரும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குளம் ஊரில் அமைந்துள்ள தெட்சிண மாற நாடார் கல்லுாரியில் 2012-ம் ஆண்டில் தாவரவியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய போது, அங்கே தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த கவிஞரும் எனது நண்பருமான முனைவர் பாஸ்ரீ அவர்களிடம் எனது கவிதைகளைக் காட்டினேன். “தாவரம் கூடவா தமிழ் பேசும்?” என்று வியந்து போன அவர், என்னைத் தமிழ் நாடு கலை இலக்கியக் கழகம், கொட்டாரம் -க்கு வாரம் தோறும் கவியரங்கம் செய்ய அழைத்தார். அங்கே எனக்கு முதன் முதலில் ‘பா’ இலக்கணம் சொல்லித் தந்த எனது குருநாதர் மாபெரும் ‘கவிஞர். நாஞ்சில் நாரண தொல்காப்பியர்’ அவர்களையும் சந்தித்தேன். அதன் பின்னர் எழுந்த ஆர்வத்தில் பல்வேறு பாவகைகளை (9 வகையான) எழுதக் கற்றுக் கொண்டேன். எங்கள் தமிழ்நாடு கலை இலக்கியக் கழகம் ஒரு அருமையான பயிற்சிப் பட்டறை என்பதால் எனக்கு நல்ல பயிற்சிகளை அங்கு வரும் தமிழறிஞர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக அதன் செயலாளரும் எமது நண்பருமான கவிஞர் முனைவர் பாஸ்ரீ அவர்கள், புலவர் திரு. இராமசுவாமி, மற்றும் தமிழறிஞர் பல்லோர் அளித்ததன் காரணமாக பல்வேறு பாவகைகளை நன்கமைக்கக் கற்றுக் கொண்டேன்.

     ‘இராம காவியம்’ என்ற பெயரில் அடியேன் எழுதிய இராமாயணத்தை தமிழ்நாடு கலை இலக்கியக் கழக அரங்கத்தில் 2013-ம் ஆண்டு முதல் ஒவ்வொறு ஞாயிறுகளிலும் அரங்கேற்றம் செய்து வந்தோம். அந்த அரங்கில் வைத்தே அதற்கு “செல்வராமாயணம்” என்று எனது குருநாதர் மாபெரும் கவிஞர். ‘நாஞ்சில் நாரண தொல்காப்பியர்’ அவர்களால் பெயர் சூட்டப் பட்டது. அடியேனுக்கு “இளைய கம்பன்” என்ற விருதும் வழங்கப் பட்டது. நாஞ்சில் கலையகம், கொட்டாரம் சார்பிலும் ‘இளைய கம்பன்’ விருது மீண்டுமொரு முறை 2019-ம் ஆண்டில் எனக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும் பல விருதுகளும், பாராட்டுக்களும் கிடைத்த வண்ணமே உள்ளன.

     செல்வராமாயணம் ஏறக்குறைய 20000 பாடல்களால் ஆனது. இது வரையில் அதில் இருந்து இரண்டு நூல்கள் வெளியிடப் பட்டுள்ளன. நூல்களின் தலைப்பு ‘செல்வராமாயணம் – குமரிக் கண்ட காலம்’, ‘செல்வராமாயணம் – வசந்த காலம்’ ஆகியனவாகும். இராமாயணம் அல்லாத பிற பாடல்களைத் தொகுத்து ‘காலம்-காற்று-காதல்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலும் வெளியிட்டுள்ளேன்.

      குடும்ப வாழ்வில் என்னோடு இணைந்த எனது இல்லத் தலைவியின் பெயர் திருமதி செ. கலாவதி. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. தமிழ் நாடு மின்சார வாரியத்தில் உதவிச் செயற் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கவிதை எழுதுவதற்குத் தடையாக இருக்கவில்லை என்பதே இவர் எனக்குத் தரும் பெரும் ஊக்கம் தான். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மகன் பெயர் ஆதவன். மகள் பெயர் ரோஷிணி. இருவருமே மிகுந்த தமிழார்வம் மிக்கவர்கள்.

     மொத்தமாக இது வரையிலும் பத்து வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளேன். பல நாடுகளின் மொழிகளில் தமிழின் தடயம் நிறையவே உள்ளது. தமிழே உலகின் தாய் மொழி என்பதைத் தமிழின் தென் அமெரிக்காவின் ஆண்டஸ் மலை என்கிற தமிழ் ஆண்ட மலை, அமேசான் காட்டுப் பகுதிகள், அங்கோடும் அமேசான் நதியாவும் “யாம் தமிழ் மக்கள்” எனச் சொல்லிக் கொண்டு, தமிழின் ஆழ அகலம் போல் வற்றாமல் மண்ணில் பரந்து விரிந்து ஓடுவது யாவும் கண்டு, அங்கே காணும் தமிழை உண்டு அவற்றைத் தொகுத்தது – என்று நானே செய்த தமிழ் சார்ந்த சில கள அனுபவங்களும் பெற்றுள்ளேன்.

 

Author’s Books

Get In Touch